Thursday 14 April 2011

பீட்டர் வியெரின் Picnic at Hanging Rock - 17 ஏப்ரல் 2011




Picnic at Hanging Rock
இயக்கம்: பீட்டர் வியெர்
ஆஸ்திரேலியா
17 ஏப்ரல் 2011; மாலை 5.45

பெர்க்ஸ் மினி தியேட்டர்
ஆஸ்திரேலியாவில் மேட்டுக்குடி பெண் குழந்தைகளுகான ஒரு பள்ளி. கண்டிப்புக்குக் பெயர் போன அப்பள்ளியின் தலைவி பெண்களை Hanging Rockக்கு சுற்றுலா சென்றுவர அனுப்புகிறார்.

மலையில் ஏறி பார்ப்பதற்காகச் செல்லும் மூன்று பெண்களும் அவர்களைத் தேடிச் செல்லும் ஆசிரியை ஒருவரும் திரும்புவதில்லை.

ஒரு வாரம் கழித்து ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துக் காப்பற்றுகின்றனர். மற்றவர்? மனதைச் சுண்டியிழுக்கும் வண்ண ஒளிப்பதிவில் காட்டப்படும் காட்சிகள், இசை, சம்பவங்கள் அனைத்தும் நம்மை வேறு உலகுக்குக் கொண்டு சென்றுவிடுகின்றன, .
1975 இல் வெளிவந்த இந்தத் திகிலும் மர்மமும் சேர்ந்த திரைப்படம் இன்றும் எராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தைப் பற்றிய விவரங்களை இங்கு காணலாம்: http://konangalfilmsociety.blogspot.com/

இயக்குநர் பீட்டர் வியெர்

Wednesday 6 April 2011

கோபயாஷி - பாகம் 3


திரைப்படத்தின் உன்னதக் கலைஞன்
மசாகி கோபயாஷி
மூன்றாவது பாகம்

எஸ்.ஆனந்த்

ரத்தச் சிவப்பான வானம்; அங்கிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கண்; எழுநூறு வருடங்களுக்கு முன் போரிட்டு மடிந்த கதையைப் பாடலாகக் கேட்கக் காத்திருக்கும் சாமுராய் ஆவிகள்; உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை மந்திரங்கள் எழுதப்பட்டு ஆவியின் வருகைக்குக் காத்திருக்கும் பார்வையற்ற ஹொய்ச்சி; கோபயாஷியின் ‘கய்தான்’, .(Kwaidan) நம்மைக் கனவுப் புனைவு உலகின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. திகில் நிறைந்த ஆவிகளின் உலகத்திற்கு அறிமுகப் ப்படுத்தப்படுகிறோம்..
திரை மேதை மசாகி கோபயாஷியின் ’கய்தான்’’ (பேய்க்கதைகள்), ஹரகிரிக்கு அடுத்து 1964 இல் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட வண்ணத் திரைப்படம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஜப்பானியத் தொல்கதைகளிலிருந்து கோபயாஷியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கதைளைக் கொண்டது.
ஜப்பானியப் பேய்ப் படங்கள், குரூரத்தையும், திகிலையும் மட்டுமே மேம்படுத்தும் ஹாலிவுட் பேய்க்கதைப் பாணியிலிருந்து மாறுபட்டவை. பேய்களைப் பற்றிய ஜப்பானியப் பார்வை மேற்கத்திய நாடுகளின் பார்வையைலிருந்து வேறுபட்டது. பேய்கள் எதிரிகளாகப் பார்க்கப் படுவதி ல்லை. சென்ற வாழ்வில் அடையமுடியாத, நிறைவேறாத ஆசைகளுடன் இன்றைய மக்களின் வாழ்வோடு இணைந்து அலைந்து கொண்டிருப்பவையாகச் சித்தரிக்கப் படுகின்றன. அழிக்கும், உதவும் சக்திகளைக் கொண்டவையாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
கபுகி, புனராகு (பொம்மலாட்டம்), நோ போன்ற ஜப்பானிய செவ்வியல் கலைகளில் ஆவிகளின் கதைகள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கய்தானில் இச் செவ்வியல் கலைகளின் உத்திகள் நேர்த்தியாகப் பயன்படுத்தபட்டுள்ளன. ‘நோ’ வின் பாதிப்பு அதிகம். ஜப்பானிய சினிமாவை, மேற்கத்திய சினிமா தீவிரமாகப் பாதித்திருந்த நேரத்தில், முற்றிலும் ஜப்பானிய மரபுசார்ந்த தொல்கதைகளைக் கோபயாஷி திரைப்படமாக்கியது குறிப்பிடத்தக்கது.
கய்தான் கலையம்சத்திற்காக, உலகளவில் உயர்வாக மதிக்கப்படும் திரை ப்படம். ஆவிக்கதைகளுக்கான திரைப்படப் பகுப்பில், உலகில் தனக் கென்று தனியிடத்தைப் பெற்றிருக்கிறது. I964 இல், நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன், இன்றிருக்கும் கணினி, கிராபிக்ஸ் உதவிகள் ஏதுமில்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சி அமைப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின் றன . புரதான ஜப்பானிய ஓவியங்களின் அழகான பதிவுகள் போல, கோபயாஷியால் கய்தானின் கதைகள் செலுலாய்டில் பதிவு செய்ய்யப்ப்ட்டுள்ளன.
வெகு சில வெளிப்புறக் காட்சிகள் தவிர , அனைத்துக் காட்சிகளும் கோபயாஷியின் தனிக் கவனத்தில் உருவான மாபெரும் அரங்குகளில் படமாக்கப்பட்டன. காட்சிகளுக்கான வண்ணங்களைத் தீட்டுவதிலும் கோபயாஷி ஈடுபட்டிருந்தார். அவர் ஓவியக்கலையை முறையாகப் பயின்ற ஓவியரும் கூட. காலை , பகல், அந்திமாலை நேரங்களின் ஆகாயத் தோற்றக் காட்சிகள், கடலில் நடக்கும் போர்க் காட்சிகள் உட்பட, கய்தானின் அனைத்துக் காட்சிகளுக்கும் கோபயாஷி தெரிவு செய்த வண்ணங்களே பயன்படுத்தப்பட்டன. கய்தானின் வண்ணப் பின் புலங்களின் அழகியல் பற்றிய உரையாடல்கள் இன்றுவரை திரைப்பட ஆர்வலர்களிடையே தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
முதல் கதையான ’கறுத்தகூந்தல்’, அன்பு மனைவியைப் பிரிந்து செல்லும் சாமுராய் வீரனைப் பற்றியது. ஏழ்மையில் உழலும் வேலையற்ற சாமுராய்க்கு ஒரு செல்வந்தனின் மகளைத் திருமணம் செய்யும் வாய்புக் கிடைக்கிறது. அழுது புலம்பும் மனைவியை விவாகரத்து செய்து, தனியாக விட்டுவிட்டு செல்வந்தனின் மருமகனாகிறான். செல்வம் கொழிக்கும் வசதியான வாழ்க்கையில் காலம் கழிகிறது. மனது பழைய மனைவியின் மென்மை யையும், அன்பையுமே நினைத்துக்கொண்டிருக்கிறது.
பழைய மனைவியையே நினைத்து அவன் மறுகுவதைக் காணும் செருக்கு மிக்க செல்வந்தனின் பெண், அவனை அவமானப்படுத்துகிறாள். சாமுராய் அந்த இடத்தை விட்டுத் தன் பழைய மனைவியின் வீட்டுக்குத் திரும்புகிறான். சிதிலமடைந்து கிடக்கும். வீட்டினுள் நுழைந்து தேடி, மனைவியைக் கண்டடைந்து மன்னிப்புகோருகிறான். இனி பிரியப்போவது இல்லை என்று உறுதி கூறுகிறான். இரவுப் பொழுது மகிழ்ச்சியாகக் கழிகிறது.
காலை கண்விழிக்கும் போது அதிர்ந்து போகிறான். அருகில் இருப்பது அவனது பிரிவுக்குப் பின் என்றோ இறந்து போன மனைவியின் அரித்துப்போன உடல். அதிர்ச்சியில் ஓட முடியாமல் உறைந்து விடுகிறான். பயத்தில் முகம் வெளிர்த்து ஒட முயற்சிக்கையில், மனைவியின் கருத்த கூந்தல் தன்னை நோக்கி வருவதைக் காண்கிறான். தப்பிக்கக் கால்கள் ஒத்துழையாமல், கீழே விழுகிறான். தனனக்காகவே வாழ்ந்து உயிர் துறந்த அந்த அன்பு மனைவியை விட்டு என்றும் பிரியமுடியாதபடி அந்த வீட்டிலேயே அவன் தன் முடிவைச் சந்திக்க வேண்டியதாகிறது.
இந்தப்பகுதியின் வெளிப்புறக் காட்சிகளில் சாமுராய் வீரன் போர்ப்பயிற்சிப் போட்டிகளில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. வேகமாகச் செல்லும் குதிரை மீது அமர்ந்து அம்பு எய்யும் போட்டியில் பங்குபெறும் சாமுராயின் மனம் பின்னோக்கி மனைவியிடம் செல்லுவது பிம்பங்களால் அழகாகச் சொல்லப்படிருகிறது. மனைவியின் கூந்தலிடமிருந்து தப்பிக்க முயலும் காட்சிகளின் ஒளியமைப்பு பற்றியும் சொல்ல வேண்டும்.
இரண்டாவது கதை ’பனிப் பெண்’. பனி பெய்யும் காட்டுப்பகுதியில் உலவிக்கொண்டிருக்கும் பனிப் பெண்ணின் ஆவியைச் சந்திக்கும் விறகு வெட்டியின் கதை. விறகு வெட்டியும், அவன் நண்பரும் காட்டில் மரங்களை வெட்டிகொண்டிருக்கின்றனர். திடீரெனத் தாக்கும் கடும் பனிப் புயலிலிருந்து தப்பித்து வழியிலுள்ள ஒரு ஆளற்ற குடிசையில் இரவைக் கழிக்கின்றனர். மரம்வெட்டி பார்த்துக்கொண்டிருக்க அங்கு அந்தக் கொடூரம் நிகழ்கிறது. அருகில் படுத்திருக்கும் வயதான நண்பரை அங்கு தோன்றும் பனிப் பெண்ணின் ஆவி கொன்றுவிடுகிறது. தான் கண்டதைப் பிறரிடம் சொன்னால் உயிரை இழப்பது நிச்சயம் என விறகு வெட்டியை எச்சரித்துவிட்டுப் பனிப் பெண்ணின் ஆவி சென்றுவிடுகிறது.
விறகு வெட்டி அதிர்ச்சியிலிருந்து மீள சில நாட்கள் ஆகின்றன. மீண்டும் காட்டில் மரம் வெட்டச் சென்று திரும்பும் வழியில் ஒரு அழகான பெண் வரக் காண்கிறான். மாலை மங்கி இருள் குவியும் நேரம். அடுத்த ஊருக்கு வழி கேட்கும் அப்பெண்ணைத் தன் வீட்டில் தாயுடன் இரவு தங்கச் சொல்கிறான். யுக்கி அங்கேயே தங்கிவிடுகிறாள். அவன் தாய் இருவருக்கும் மணமுடித்து வைக்க, குழ்ந்தைகள் பிறந்து குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுடன் கழிகிறது.
மணமாகிக் குழந்தைகள் பெற்று ஆண்டுகள் கழிந்தபின்னும் யுக்கி இளமை மாறாமலிருப்பது கண்டு ஊரார் வியந்து பேசுகின்றனர். ஒரு இரவில் யுக்கியை விளக்கொளியில் பார்க்கும் விறகுவெட்டிக்கு பனிப்பெண்ணின் ஆவி நினைவுக்கு வர, சிரித்துக் கொள்ளுகிறான். ஏனென்று கேட்கும் யுக்கியிடம் பனிப் பெண்ணின் ஆவியை சந்தித்த இரவைப் பற்றிக் கூறி முடிக்ககும்போது, அவன் சற்றும் எதிர்பாராதது ந்டக்கிறது.
அந்த நிமிடம்வரை உடனிருந்து அவன் மனைவியாக வாழ்ந்த யுக்கி சாதாரணப் பெண் அல்ல; காட்டில் கண்ட பனிப்பெண்ணின் ஆவி. மிகுந்த கோபத்துடன், தன் பழைய உருவை அடைகிறது. கட்டளையை மீறித் தன்னைப்பற்றிச் சொன்ன விறகு வெட்டியை கொல்லப்போகிறது என நாம் எதிர்பர்க்கும் நேரம், குழந்தைகளுக்காக அவனைக் கொல்லாமல் விட்டுவிடுவதாகச் சொல்லி அங்கிருந்து மறைந்துவிடுகிறது. நடந்ததை சற்றும் நம்ப முடியாமல் விறகுவெட்டி கண்கலங்கி நிற்கிறான். இத்துடன் இரண்டாவது கதை முடிகிறது.
பனிப்பெண் ஆவி வரும் நேரங்களில் கண் ஒன்று வானிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பதும், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓடைகளும், நெடுந்துயர்ந்த மரங்களும், பரந்த வானமும், காடுகளும் மிகைப் புனைவு உலகை நம்முன் கொண்டு நிறுத்துகின்றன. கொபயாஷி தான் நிர்மாணித்த அரங்கங்களில் படமாக்கியது, இக்கதைகளின் அழகியலைத் தான் சொல்ல நினைத்த அளவில் சொல்லும் முழு வாய்ப்பையும் அளித்திருப்பதைக் காணலாம். மிக நேர்த்தியான ஒளிப்பதிவு. ஒளி மாற்றத்தைக் கொண்டே யுக்கியை மனைவியிலிருந்து , திகிலூட்டும் ஆவியாக மாற்றிக் காட்டுவது போன்று ஒளியை இப்படம் முழுவதும் திறம்படப் பயன்படுத்தியுள்ளார்.
’காதற்ற ஹொய்ச்சி’ மூன்றாவது கதை. ஜப்பானிய ஆவிக் கதைகளில் பிரபலமான ஒன்று. கண் பார்வையற்ற பாடகன் ஹொய்ச்சி, பிவா வாத்தியத்தை இசைத்து வீரமிக்க போர்க்களக் காவியங்களைப் பாடுபவன். எழுநூறு வருடங்களுக்கு முன் கென்ஜி, ஹெய்க்கி சாமுராய் பிரிவுகளுக்கிடையே கடலில் நடந்த கோரமான இறுதிப்போரின் கதையைப் பாடுவதில் பெயர் பெற்றவன். ஒரு புத்த விஹாரில் பணியாளனாகச் சேருகிறான்.
ஒரு இரவில் பிக்குகள் இருவரும் வெளியே சென்றிருக்கும்போது தனியே இருக்கும் ஹோய்ச்சியை யாரோ அழைப்பது கேட்கிறது. சாமுராய் வீரன் ஒருவன் வந்திருக்கிறான். தனது தலைவர் ஹொய்ச்சியின் பாடலகளைக் கேட்க ஆவலாயிருப்பதாகச் சொல்லி அழைத்துச் செல்கிறான். ஹொய்ச்சியைத் தான் அழைத்துச் செல்வதை யரிடமும் சொல்லக்கூடாது என்பது தன் தலைவரின் கட்டளை என எச்சரிக்கிறான். வெகு நேரம் கழித்து கோவிலுக்குத் திரும்பும் ஹொய்ச்சி களைப்பு மிகுதியால் மறுநாள் வெகுநேரம் உறங்கிவிடுகிறான்.
கோவிலில் அனைவருக்கும், ஹோய்ச்சியின் நடவடிக்கை புதிராக இருக் கிறது. காதலியைச் சந்திக்க வெளியே சென்று வந்ததாக ஒர் வேலைக்காரன் கேலி செய்யும் போதும் . ஹொய்ச்சி எதுவும் பேசுவதில்லை. மறு இரவும் ஹோய்ச்சி வெளியே சென்று வருவதைக் காண்கின்றனர். ஹொய்ச்சி எப்போதும் களைப்புடன் காணப்படுவதை விசாரிக்கும் தலைமைக் குருவிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுகிறான். மழையும் காற்றும் பலமாக இருக்கும் அன்று இரவு மீண்டும் ஹோய்ச்சி வெளியே செல்லுவதைக் காணும் குருக்கள், அவன் செல்லுமிடத்தைத் தெரிந்து கொள்ளவும், திரும்பக் கூட்டிவரவும் வேலையாட்கள் இருவரையும் அனுப்புகின்றனர்.
ஹொய்ச்சியை அந்த சாமுராய் வழக்கமாகச் செல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு, கடல் போரில் மரணத்தைத் தழுவிய ஹெய்க்கி குல சாமுராய்களும், அவர்களின் தலைவரும், குழந்தை இளவரசரும் அவரது குடும்பமும் அரச சபையில் அமர்ந்திருக்கின்றனர். கென்ஜி குல சாமுராய்களுடன் கடலில் தாங்கள் போரிட்ட இறுதிப் போரின் காட்சிகளைப் பாடச் சொல்கின்றனர்.
ஹோய்ச்சி பிவா வத்தியத்தை இசைத்து , பாடத் தொடங்குகிறான். உருக்கமான படல். பிவா வாத்தியதின் ஆழமான சோக ஒலியுடன் ஹொய்ச்சி பாடும் உணர்ச்சிகரமன பாடலை ஆவிகள் கேட்டுகொண்டிருக்கின்றன. வேலையாட்கள் ஹோய்ச்சியை உரத்த குரலில் அழைப்பது கேட்கிறது. அந்தக் கணமே ஆவிகள் அமர்ந்திருந்த இடங்கள் கல்லறைகளக மாறுகின்றன. யரையும் காணோம். கண்ணற்ற ஹொய்ச்சிக்கு நடப்பது ஏதும் தெரியாத நிலை. பாடலை நிறுத்தினால் சாமுராய் தலைவரின் கோபத்துக்கு ஆளவது நிச்சயம் என மன்றாடும் ஹொய்ச்சியை, வேலையட்கள் பலவந்தமாகக் கோவிலுக்குத் திருப்பிக் கொண்டுவருகிறார்கள்.
தலைமைக் குரு விளக்கிச் சொல்ல ஹொய்ச்சிக்கு நிலமை தெளிவாகிறது. அவனை அழைக்க வந்தது ஒரு ஆவி. அவன் சென்றது இடுகாடு. ஹோய்ச்சி அந்தக் கல்லறைகளிலுள்ள சாமுராய்களின் ஆவிகளுக்காக இரவுகளில் பாடி வந்திருக்கிறான். எப்படியும் ஒருநாள் ஹொய்ச்சியின் உயிர் பறிக்கப்பட்டு அந்த ஆவிகளோடு அவன் இணையவேண்டி வரும் என்பதைச் சொல்லுகிறார். மறு இரவு அழைக்க வரும் ஆவியிடமிருந்து ஹொய்ச்சியைக் காப்பாற்ர்ற ஒரு திட்டம் உருவாகிறது.
ஹொய்ச்சியின் உடலில் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை மந்திரங்கள் எழுதப்படுகின்றன. இரவில் தனியாக பிவா வத்தியத்தை அருகில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறன். சாமுரய் ஆவி வந்து அழைக்கும்போது ஹொய்ச்சியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. உள்ளே வந்து பார்க்கும் ஆவிக்கு பிவா வத்தியத்தைத் தவிர எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை.
எழுதப்பட்ட மந்திரங்கள் ஹொய்ச்சியின் உடலை ஆவியின் கண்களுக்கு மறைத்து விடுகின்றன. ஆனல் ஹொய்ச்சியின் இரு காதுகளும் ஆவியின் கண்களுக்குத் தெரின்றன. குழப்பமடையும் ஆவி, இந்தக் காதுகளையாவது தலைவரிடம் எடுத்துச் செல்லவேண்டும் என முடிவுசெய்கிறது. ஹொய்ச்சியின் இரு காதுகளையும் எடுக்க முயல, தாங்கொண்ணா வேதனயுடன் , எந்த சப்தமும் எழுப்பாமல் தனது காதுகளைச் சாமுராய் ஆவி பிய்த்து எடுத்துப்போக விட்டுவிடுடுகிறான்.
இடம் முழுவதும் ரத்த்ம் கொட்டிக் கிடக்கிறது. காலையில் வேலையாட்கள் சுத்தப்படுத்துகின்றனர். இரண்டாவது குரு, ஹொய்ச்சியின் இரு காதுகளின் மீது மந்திரங்களை எழுதத் தவறியதால் ஹொய்ச்சி தன் காதுகளை இழக்க நேருகிறது. இருந்தும், ஹொய்ச்சியின் உயிருக்கு வந்த ஆபத்து காதுகளோடு போயிற்று என அறியும்போது , அனைவருக்கும் நிம்மதி. காயம் ஆறும் வரை ஓய்வு அளித்து, ஹொய்ச்சியை கவனித்துக் கொள்கின்றனர். காதற்ற ஹொய்ச்சியின் படல்களைக் கேட்க பல இடங்களிலிருந்து செல்வந்தர்களும், பிரபுக்களும் வருகின்றனர். பரிசுகளும் சன்மானங்களும் குவிகின்றன. ஹொய்ச்சியின் புகழ் நாடெங்கும் பரவுகிறது.
சப்தமின்றிக் கொந்தளிக்கும் கடல் அலைகளைத் திரையில் நாம் காண்பதோடு இக்கதைப் பகுதி தொடங்குகிறது. கடலின் கரையில், கண்ணற்ற ஹொய்ச்சி பாடும், கென்ஜி, ஹெய்க்கி சாமுராய் குலங்களிடையே நடந்த போரின் பாடலைத் தொடர்ந்து, அந்த இறுதிப்போரைத் திரையில் காண்கிறோம் புரதான ஓவியங்களில் தீட்டப்பட்ட இப் போரின் காட்சிகளை ஒரு புறத்தில் காட்டுவதுடன், இரு சமுராய் குலங்களும் நேரில் போரிடும் காட்சிகள் திரையில் காட்டப்படுகின்றன.
ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ள வண்ணங்கள், போர்க்காட்சியில நாம் காணும் போராளிகளிலும், அவர் உடைகளிலும், கடலிலும், பிரதிபலிக்கின்றன. ஆக்ரோஷமான போர். மனதை உலுக்கும் பாடலுடன் இணைந்து அற்புதமகப் படமாக்கப்பட்டுள்ளது. குழந்தை இளவரசருடன் தாதிப்பெண், ரத்தமாகச் சிவப்பு நிறத்தில் தகிக்கும் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இக்காட்சிகளில் நாம் காண்பது, வார்த்தைகளில் பதியமுடியாத. கண்களுக்கு விருந்தாகும் வண்ணங்களின் அற்புதம்; பிம்பங்களின் வழியாக மிகைப் புனைவுக்கதை சொல்லலின் உச்சம்.
இக் கதைக்கும், இக்கதை நடந்ததாகக் குறிப்பிடப்படும் கடல் பகுதிக்கும் தொடர்பு உண்டு. இப்பகுதிக் கடலில் வழும் ஒருவகை நண்டுகளின் முதுகு ஓடுகள் சாமுராயின் முகம் போன்ற அமைப்புடன் காணப்படுகின்றன. இறுதிப் போரில் கடலில் மாண்டு அழிந்த ஹெய்க்கி குல சாமுராய் ஆவிகள், அப் பகுதியில் நண்டுகளாக வாழ்ந்து வருவதாக ஒரு நம்பிக்கை ஜப்பானில் நிலவுகிறது. ஹெய்க்கி நண்டுகள் என அழைக்கப்படும் . இந்த நண்டுகள் உண்ணப்படுவதில்லை. வலையில் சிக்கும் இந்த நண்டுகளை மீனவர் கடலில் திருப்பி எறிந்து விடுவர். கார்ல் சாகன், தனது ‘காஸ்மாஸ்’ (Cosmos) தொலைக்காட்சித் தொடரிலும், புத்தகத்திலும் ஜப்பானின் கடல் பகுதியில் காணப்படும் இந்த ஹெய்க்கி நண்டுகளைப் பற்றியும், கென்ஜி, ஹெய்க்கி சாமுராய்களின் இறுதிப் போர் தொடர்பாக அப்பகுதியில் வழங்கி வரும் தொல் கதை பற்றியும் குறிப்பிட் டுள்ளார்.
இறுதிக் கதை ‘ஒரு ’கோப்பைத் தேநீரில்’, 1900 இல் நடந்த கதையாகச் சொல்லப்படுகிறது. பாதி எழுதப்பட்டு நின்றுபோன ஒரு கதையையும் அதை எழுதிக்கொண்டிருந்த எழுதாளரையும் பற்றியது. எழுதி முடிக்கப்படாத அக்கதை சில நூறு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தில் தொடங்குகிறது. ஒரு பிரபுவின் மெய்க்காப்பாளன் குடிக்க எடுக்கும் குவளையின் தண்ணீரினுள், சிரிக்கும் சாமுராயின் முகம் தெரிகிறது. இருமுறை தண்ணீரைக் கீழே கொட்டியபிறகும் அம்முகம் தெரிவதைத் தடுக்க முடியாமல் அப்படியே குடித்துவிடுகிறான்.
அன்று இரவு தலைவர் வீட்டில் காவல் பணியில் இருக்கும் மெய்க்காப்பாளனை, சாமுராயின் ஆவி சந்ததிக்கிறது. காலையில் தண்ணீரைக் குடித்துத் தன்னைக் காயப்படுத்தியது ஏன் எனக் கேட்கிறது. மாளிகையினுள் காவலை மீறி வந்த சாமுராய் மீது கோபமுறும் மெய்க்காப்பளன்ன் அதை ஆவியென்று அறியாமல். துரத்தித் தாக்குகிறான். அனைத்துக் காவலர்களும் உதவிக்கு வருகின்றனர். மெய்க்காப்பளன் காணும் சாமுராய் மற்றவர் கண்களுக்குத் தெரிவதில்லை. மேலும் கோபமடையும் மெய்க்காப்பளன் வாளை வீச , சாமுராய் மறைந்து விடுகிறான்.
ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பின்னிரவு நேரம், மெய்க்காப் பாளனைக் காண மூவர் வருகின்றனர். வெளியில் சென்று விசாரிக்கிறான். முவரும் காலையில் அவனால் விரட்டப்பட்ட ஆவியான சாமுரய் தலைவனின் சேவகர்கள் காலையில் வாளை வீசிக் காயப்படுதிய்க் குற்றத்திற்கு, இன்னும் ஒரு மாதத்தில் தங்கள் தலைவர் நேரில் வந்து தண்டனை அளிப்பார் என அறிவிக்கின்றனர். மிகவும் கோபமுறும் மெய்க் காப்பாளன் துரத்தித் தாக்க, மறைந்து விடுகின்றனர். பின்னர் மறு பக்கம் தோன்றுகின்றனர். அங்கு ஓடும்போது மறைகின்றனர். மறைவதும், தோன்றுவதுமாக , மெய்க்கப்பாளனை வெகு நேரம் அலைக்கழிகின்றனர். மெய்க்கப்பாளன் தன்னிலை இழந்து புத்தி பேதலித்தவனாக சிரிக்க ஆரம்பிக்கிறான்.
இந்தப் பகுதியோடு , எழுதப்பட்ட கதை நின்றுவிடுகிறது. எழுதப்பட்ட அந்தப் பக்கம் அப்படியே மேஜை மீது திறந்த நிலையில் இருக்கிறது. எழுத்தாளரைப் பார்த்து கதையை வாங்கிச் செல்ல பதிப்பாளர் வருகிறார். எழுத்தாளர் அவரது அறையில் இருப்பதாக மனைவி சொல்ல உள்ளே வருகிறார். எழுத்தாளரைக் காணோம். காத்திருக்கச் சொல்லிவிட்டு, தேநீர் தயாரிக்கத் தண்ணீர் கொண்டுவர பின் பக்கம் போகிறாள். சற்று நேரத்தில் மனைவியின் அலறல் கேட்கிறது. என்னவென்று சென்று பார்க்கும் பதிப்பாளருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அங்கிருக்கும் பாத்திரத்தின் அருகே வந்து பார்க்கிறார். பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் எழுத்தாளர் தெரிகிறார். நான்காவது பகுதி முற்றுப் பெறுகிறது.
இறுதிப்பகுதி அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. கய்தானின் திரையாக்கம் முற்றுப்பெறுவதற்கு முன்பே, இப்படதிற்கு ஆகிக்கொண்டிருந்த செலவால் மூடப்படும் நிலையை அடைந்த தோஹோ திரைப்பட நிறுவனம், கோபயாஷியியை இனி ஒப்பந்தம் செய்ய்வதில்லை என முடிவெடுத்தது. கய்தானின் இறுதிப் பகுதியில், வெளிவரமுடியாத நிலையில் தண்ணீர்ப் பாத்திரத்தில் சிக்குண்ட எழுத்தாளர் நிலையைக் காண்பிப்பதன் மூலம் தனது அப்போதைய நிலையைக் கோபயாஷி வெளிப்படுத்தியதாகக் கூறப்படுவதுண்டு. இப்படத்தோடு கோபயாஷியின் காலம் திரையுலகில் முடிவு பெற்றதாகச் செய்தி பரவியது. கோபயஷி இதற்கெல்லாம் கலங்குபவர் அல்ல. சொந்தத் தயரிப்பாக அவர் அடுத்து இயக்கி வெளியிட்ட திரைப்படம், வெனிஸ் திரைப்படவிழாவில் பரிசு பெற்று, உலகெங்கும் பாராட்டுகளைக் குவித்த ‘சாமுராய் கலகம்” (Samurai Rebellion)
கய்தானின் இசை மறக்க முடியாதது. புகழ் பெற்ற ஜப்பானிய இசையமைப்பாளர் தொரு தாக்கெமித்சுவின் இசையமைப்பு. ஜப்பானிய செவ்வியல் இசை, மேற்கத்திய நவீன உத்திகளோடு அதன் புரதானத் தன்மை சற்றும் குறையாத வகையில் இசைக்கப்பட்டிருக்கிறது. நம்மை அப்படியே கனவுப் புனைவு உலகத்துக்குக் கொண்டு செல்லும், ஆழமான இசை. தொரு தாக்கெமித்சு, ஹரகிரியிலிருந்து கோபயாஷியின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர்களின் முக்கிய திரைப்படங்கள் இவரது இசையமைப்பில் வெளிவந்துள்ளன.
கய்தானின் ஒளிப்பதிவின் சிறப்பு பற்றி முன்பே சொல்லப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் யொஷியோ மியாஜிமா. இவர் கோபயாஷியின் ஹரகிரி, ஹ்யூமன் கண்டிஷன் படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். முதற் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை ஒவ்வொரு சட்டகமும் அற்புதமாகப் படமாக்கப் பட்டுள்ளது. ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, இசை ஆகிய மூன்றும் மிக அழகாக இணைந்து உருவாகியுள்ள திரையோவியம் கய்தான்.
கய்தான் போன்ற பேய்க்கதைகள் கொண்ட திரைப்படங்கள் போருக்குப் பின் ஜப்பானில் வெளிவரத் தொடங்கியதற்குக் காரணங்கள் உண்டு. ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் சந்தித்த பேரழிவுகளும், போருக்குப் பின் அமெரிக்கப் பாதுகாப்புக் குடையின் கீழ் கொண்டுவரப்பட்டதும் ஜப்பானிய மக்களின் மன நிலயை வெகுவாகப் பாதித்திருந்தன. ஏழு வருடங்கள் தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சி நடந்ததும், மேற்கத்திய கலாச்சாரமும், பழக்கவழக்கங்களும் ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்படதும், பல நூற்றாண்டுகளின் கலாச்சாரதைக் கொண்ட ஜப்பானியருக்குத் தாஙக முடியாத வேதனையைக் கொடுத்தன.
மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பால் ஆபத்துக்குள்ளான ஜப்பானியக் கலாச்சாரம் மீட்டெடுக்கப்படும் வகையில், ஜப்பானியச் செவ்வியல் கலைகளைப் பிரதிபலிக்கும் பேய்க்கதைகள் ஐம்பதுகளிலிருந்து ஜப்பானில் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தன. போருக்குப் பின் ஜப்பானியர் அனுபவித்த மன இறுக்கங்களின் வெளிப்பாடாகவும் இதைச் சொல்லலாம். உலக சினிமாவில் ’J Horror’ எனும் தனித் திரைப்படப் பகுப்பு எற்படும் அளவு ஜப்பானியப் பேய்ப் படங்கள் இன்றுவரை வெளியாகி வந்துகொண்டி ருக்கின்றன. இவற்றில் குரூரமும் திகிலும் மட்டுமே நிறைந்த இன்றைய ஹாலிவுட் பாணி ஜப்பானியப் பேய்ப்படங்களும் அடக்கம்.
கய்தான், கான் திரைப்பட விழா போன்ற உலகத் திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றுப் பாராட்டப்பட்ட திரைப்படம். கோபயாஷி மனித்துவத்தை முன்னிறுத்தி , தன் நாட்டின் அரசு, ராணுவம் , நிலப் பிரபுத்துவம் மீதான தீவிர விமரிசனங்களைத் தனது திரைப்படங்கள் மூலம் உலகறியச் செய்தது போலத் தான் நேசித்த தனது நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் தொல் கதை, தொல் இசை, புரதான ஓவியம், போன்ற செவ்வியல் கலைகளின் அற்புதங்களை உலகுக்கு எடுத்துச்சொல்லும் உன்னதக் காவியமாக கய்தானை அளித்திருக்கிறார்.
கய்தானுக்குப் அடுத்து வெளிவந்த கோபயாஷியின் முக்கியமான திரைப்படம் ‘ சாமுரய் கலகம்’. அதற்குப்பின் வந்த அவரது திரைப்படஙகள் ஜப்பானைத் தவிர வெளியுலகில் சரியாக அறியப்படாதவை. அவற்றில் அரிதாகப் பார்க்கக் கிடைத்த திரைப்படம் ’தீயவர்களின் விடுதி’ (Inn of Evil). 1971 இல் வெளிவந்த கோபயாஷியின் பதினெட்டாவது படம். நகதாய் இதன் கதாநாயகன். எப்போதும் குடித்துக்கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும், சதா எனனும் முரட்டுக் கடத்தல்காரனின் பாத்திரம்.
சுற்றி சதுப்பு நிலம் கொண்ட சிறு தீவிலிருக்கும் விடுதி. பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைந்து இங்கு வாழும் ஐந்தாறு குற்றவாளிகள். கொலை , கொள்ளை , கடத்தல் அனைத்திலும் அத்துப்படியானவர்கள். நகர நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் துணையுடன் விடுதி உரிமையாளன் தலைமையில் கடத்தல் தொழில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அருகிலுள்ள துறைமுகத்திலிருந்து கடத்தப்படும் பொருட்களை மறைத்து வைக்க வசதியான விடுதி. வேறு எவரும் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. தலைவனின் ஒரே மகளும் அங்கிருக்கிறாள்.
ஹாலந்து நாட்டுக் கப்பலிலிருந்து இறக்கப்படும் கடத்தல் சரக்குகளை உரிய இடத்த்தில் சேர்க்கத் தலைவனுடன் பேரம் பேசப்படுகிறது. இந்தக் கடத்தலின் போது தலைவனையும் அவனது அடியாட்களையும் பிடிக்க காவல் துறை ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறது. காவல் அதிகாரி ஒருவன் விடுதியுனுள் சோதனை செய்ய வருகிறான். வரவேற்று உபசரிக்கும் தலைவன், அங்கு சோதனை செய்ய வேண்டாம் எனத் தடுக்கிறான். மீறி நிர்ப்பந்திக்கும் அதிகாரி சோதனையிடும் போது சதாவின் கத்தி அவன் முதுகில் பாய்கிறது. உடல் கடற் சுழலில் எறியப்படுகிறது.
விடுதிக்கு புதிதாக ஒரு குடிகாரன் வருகிறான். புகலிடம் தேடி தொமிஜிரோ எனும் இளவயதினனும் வந்து சேருகிறான். பதிமூன்று வருடம் சிறையிலிருந்தவன். சொந்த தந்தையால் விற்கப்பட்ட அவனது காதலி ஒகிவாவை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் வீணாய்ப்போனதைச் சொல்லி அழுகிறான். அவன் கதை அனைவரையும் வேதனைக்குள்ளாக்குகிறது.. காதலியுடன் அவனைச் சேர்த்துவைக்க முடிவு செய்கின்றனர். அவளைத் தரகனிடமிருந்து மீட்க இருபது ரியோ பணம் தேவைப்படுகிறது.
காவல் துறை காணாமல் போன அதிகாரியைத் தேடிக்கொண்டிருக்கிறது. பழைய அதிகாரிகள் மாற்றப்பட்டுவிட்டனர். தீவுப்பகுதியை கடத்தல் தொழிலிருந்து சுத்தப்படுத்தும் முயற்சி தீவிரமாக்கப்படுகிறது. கடத்தல் சரக்குகளை விடுதியிலிருந்து படகுகளில் கொண்டுசெல்லும் போது,அப்படியே தொமிஜிரோவின் காதலியையும் மீட்டு வரப் புறப்படுகின்றனர். திட்டமிட்டபடி காவல் துறைப் படகுகள் அவர்களைச் சுற்றி வளைக்க, சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டு தப்பிக்கமுயலுகின்றனர். காவல் துறையுடன் சண்டை மூளுகிறது.
விடுதிக்குக் குடிக்க வரும் குடிகாரன் தன்னிடமுள்ள பணத்தையெல்லாம் தொமிஜிரோவிடம் கொடுத்து எப்படியாவது அவன் காதலியை மீட்டு வாழ்க்கை நடத்த்ச் சொல்லி அனுப்புகிறான். விடுதி காவல் துறையின் கண்காணிப்பில் உள்ளதை அறியும் தலைவன் மகளையும் மீதமிருப்போரையும் வெளியேறக் கட்டளையிடுகிறான். தலைவனைத் தவிர அனைவரும் வெளியேறுகின்றனர்.
கடத்தல் சரக்குகளுடன் சென்ற நால்வரில் சதா மட்டும் உயிருடன் விடுதிக்குத் திரும்புகிறான் .சதா வந்து சற்று நேரத்தில் வெளியேறிய மூவரும் திரும்பி வந்து விடுகின்றனர். அதற்குள் ஏராளமான படகுகள் ஆயுதமேந்திய காவலர்களுடன் விடுதியைச் சுற்றிவளைக்கின்றன. அங்கு காவல் துறை யுடன் நடக்கும் உக்கிரமன மோதலில் விடுதியிலிருக்கும் அனைவரும் கொல்லப்படுகின்றனர். மறு நாள் தொமிஜிரோ மீட்கப்பட்ட தன் காதலியுடன் அந்த இடத்திற்கு வந்து மரியாதை செலுத்துவதோடு திரைப்படம் முடிவு பெறுகிறது.
’எனது வழ்வைப் பயணம் வைத்து . . . ’ என்பது தான் இத்திரைப்படத்தின் சரியான பெயர். ஒரு நல்ல காரியத்துக்காக, வேறு எந்தப் பலனையும் எதிர்பாராது வாழ்வைப் பயணம் வைப்பதை தான் விரும்புவதாக முரடனான சதா சொல்லும்போது, விடுதியிருக்கும் அனைவரும் ஆமோதிக்கின்றனர். மிருகமாக அறியப்படும் சதா, ஒரு குருவிக் குஞ்சைக் காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளைக் காண்கிறோம் விடுதியில் இருக்கும் மகா கொடியவர்களாக அறியப்படுபவர்களிடமிருக்கும் கருணையயும் இரக்கத்தையும் உணருகிறோம். அன்பை ருசிக்க வழியற்ற அவர்கள் தொஜிமிரோவின் காதலியை மீட்டு அவனை வாழவைக்க உயிரைக் கொடுக்கத் தயாராகிறார்கள். நீதியையும் நியாயத்தையும் நிலை நாட்ட ஏற்படுத்தப்பட்டுள்ள அதிகார வர்க்கங்களின் போலித்தனத்தை கோபயாஷி இப்படத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார். அதிகாரத்தை எதிர்க்கும் அனைவரும் நிர்மூலமாக்கபடுகின்றனர். ஆனால் அவர்கள் எதற்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தார்களோ அந்த தொஜிமிரோவின் வாழ்வு புத்துயிர் பெறுகிறது.
படத்தில் பாதிக்கு மேல் இரவுக்காட்சிகள். அதிகமாக இருளை முன்னிறுத்தும் ஒளிப்பதிவு. இறுதியில் ஏராளமான ஜப்பானியக் காகித விளக்குகளுடன் காவல் துறை கவலர்கள் இருளில் விடுதியைச் சூழ்ந்து தாக்கும் காட்சிகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. கய்தானுக்கு இசையமைத்த தொரு தாக்கேமித்சு. இசையமைத்துள்ளார். வழக்கம் போல ஒளிப்பதிவும் , காட்சியமைப்புகளும் ,இசையும் அற்புதமாக இணைந்துள்ளன.
கோபயாஷியின் திரைப்படங்கள் அனைத்தும் அதிகாரத்துக்கும் அடக்கு முறைக்கும் எதிரான கேள்விகளை முன்வைப்பவை. வன்முறையைத் தழுவும் அடித்தள மக்களின் வாழ்க்கையின் அவலங்கள் மட்டுமின்று அவர்கள் மனதிலிருக்கும் அன்பும் கருணையும் இப்படத்தில் கோபயாஷியால் விவரிக்கப்படுகின்றன.

நன்றி: தமிழினி இலக்கிய இதழ்