Friday 10 December 2010

பிரமிள் நூலகம்

பிரமிள் நூலகம்

தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்பட மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்காக விரைவில் தனது அலுவலகத்தில் நூலகம் ஒன்றை அமைக்கவிருக்கிறது. இந்த நூலகத்தின் மூலம் விரிவானதொரு வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தோறும் "வாசிப்பு அனுபவத்தை" ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஏதாவது கிராமத்தில் பிரமிள் நூலக வாசகர் வட்ட வாசிப்பு நிகழ்வுகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் பரவலான வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ் எழுத்தாளர்கள் பற்றி கிராம மக்களும், மாணவர்களும் அறிந்துக் கொள்ள இந்த நிகழ்வுகள் உதவும். தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிளின் பெயரில் இயங்கவிருக்கும் இந்த நூலகத்திற்காக நீங்களும் உங்களிடம் உள்ள புத்தகங்களை கொடுத்து உதவலாம், அது ஒரே ஒரு புத்தகமாக இருந்தாலும் சரி. புத்தகங்கள் தர விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236..

வெளிநாடுகளில் வசிப்பவர்களும் புத்தகங்கள் கொடுத்து உதவலாம். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com

http://www.thamizhstudio.com/


Thursday 2 December 2010

கிக்குஜிரோவும் தமிழ் சினிமாவும்

கிக்குஜிரோ வும் தமிழ் சினிமாவும்

ஜப்பானிய சமகால இயக்குநர் தக்கேஷி கித்தானோ (Takeshi Kitano) இயக்கிய கிக்குஜிரோ’ (1999) திரைப்படத்தின் பெரும்பான்மையான பகுதிகளை நகலெடுத்து அத்துடன் பிரெசிலிய இயக்குநர் வால்ட்டர் சாலஸின் செண்ட்ரல் ஸ்டேஷன்’ (வேறு எத்தனை படங்களோ...) போன்றவற்றிலிருந்து உருவப்பபட்ட கூறுகளையும் கொண்டு தற்போது வெளியாகியிருக்கும் ஒரு திரைப்படத்தை அனைவரும் வானளாவப் புகழ்ந்துகொண்டிருப்பது திரைப்படக் கலையையே தலைகுனியவைக்கும் செயல்.

இந்தக் கூத்தில் இலக்கியவாதிகள் வேறு முதலிடத்தை எடுத்துக்கொண்டிருப்பது வேதனையான விஷயம். இலக்கியத்தில் இவ்வாறு நிகழ்ந்தால் இவர்கள் ஆமோதிப்பார்களா எனபதை இவர்களின் ரசிகர்கள் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

திரைப்படக் கலை உன்னதமான கலை. எந்த ஒரு கலைக்கும் குறைவானதல்ல.

பிறர் படைப்பை ஈயடிச்சான் காப்பியாக நகலெடுத்து தன் படைப்பாக அளித்து புகழும், பரிசுகளும் பாராட்டுகளும் பெறும் அபத்தம் நம் தமிழ்ப் பட உலகில் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இவ்வாறு நகலெடுப்பவர்கள் நம்மூரில் இயக்குநர் திலகங்களாக, ’ரத்தினங்களாக தலைமேல் வைத்துக் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.

சட்டகத்திற்கு சட்டகம் நகலெடுப்பதற்கு ஒரு இயக்குநருக்கு என்ன திறமை வேண்டியதிருக்கிறது என நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வாறான தவறுகள் அங்கீகரிக்கப்படுவது இத்துறையில் காலடி வைத்திருக்கும் இளைய தலைமுறையை வெகுவாகப் பாதிப்பதுடன், ஏற்கெனவே மோசமான நிலையிலிருக்கும் தமிழ் சினிமாவை அகல பாதாளத்திற்கு எடுத்துச் செல்ல வழிகோலுவது.

பிறர் படைப்பை அப்படியே நகலெடுத்து தன் படைப்பாகச் சொல்லி அலட்டிக் கொள்வது Plagiarism. மகா கேவலமான ஒன்று.

Plagiarism என்பதற்கு அகராதிகளில் தரப்பட்டுள்ள அர்த்தங்களை இங்கு பார்க்கலம் -

Plagiarism is defined in dictionaries as "the wrongful appropriation, close imitation, or purloining and publication, of another author's language, thoughts, ideas, or expressions, and the representation of them as one's own original work”.

Plagiarism is a kind of cheating

நம்மூரில் எல்லாமே தலைகீழ்தான் ....

என்ன செய்வது, நம் தாய்த்திரு நாட்டில் எல்லா துறைகளிலும் cheatingக்கு ஏக மரியாதை.

Cheating is celebrated here…..

இன்னும் இசைக்காக, வசனத்துக்காக மட்டுமே சினிமா பார்ப்பதுபோன்ற பரிதாபங்கள் இங்கு தொடருகின்றன. இவை இரண்டும் கேட்கப்படவேண்டியவை. திரைப்படங்களைப் பொறுத்த வரையில் தொட்டுகொள்ள ஊறுகாய் போன்று ஒரு குறிப்பிட்ட அளவோடு நிறுத்திக்கொள்ளப்பட வேண்டியவை. கண்களால் பார்க்கப்படவேண்டிய திரைப்படங்களின் நிலை இங்கு வேறுவிதமான ஒரு அபத்த நிலையை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

பணப் பிரச்சினை அல்லது வேறு தடுக்கமுடியாத பிரச்சினைகளால் மட்டுமே திரைப்படங்கள் உருவாகும் காலம் நீளலாம். பல பிரம்மாண்ட தயாரிப்புகளான உலக திரைக் காவியங்கள் ஒரு வருடகாலத்திற்குள் உருவானவை. சரியான திட்டமின்றி, ஒரு படமெடுப்பத்ற்கு வருடக் கணக்காக காலவிரயம் செய்பவர்களுக்கும், என்ன எடுப்பது என்று தெரியாமல், மைல்கணக்கில் பிலிம் சுருளை சுட்டு விரயம் செய்பவர்களுக்கும் உலக சினிமா அரங்கில் மருந்துக்குக் கூட மரியாதை கிடையாது.

இங்கோ இப்பேர்ப்பட்டவர்கள் அதி மேதாவிகளாகக் கொண்டாடப் படுகிறார்கள்.

இனி வரும் துணிவுமிக்க இளைஞர்களால் மட்டுமே நம் தமிழ் சினிமா கடைத்தேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மாற்றங்கள் கட்டாயம் நிகழும் எனும் நம்பிக்கையுடன் காத்திருப்பதைத் தவிர வேறு வழில்யில்லை.